ஞாயிறு, 11 மார்ச், 2018

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 50) - பசுவும் ஆனேறும்

                                குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 50) - பசுவும் ஆனேறும்


பசுவும் ஆனேறும்

    ஆனிரை முல்லை நிலத்துக்குரியது; காலையில் மேய் புலத்திற்குச் சென்று மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்குத் திரும்பி வரும். வருங்கால் பசுக்கள் கன்றை நினைந்து மடியில் பால் சுரப்ப வரும் காட்சி ஒரு செய்யுளில் சொல்லப்படுகின்றது. தன் தாய்ப்பசுவின் வரவைக் கன்று மாலைக் காலத்தில் எதிர்நோக்கி நிற்கும். பசுவிற்கும் கன்றுக்குமிடையே உள்ள அன்பு மிகச் சிறந்தது; ஆதலின் அதனைத் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையேயுள்ள அன்பிற்கு உவமை கூறுவர்.

    பசு அறுகம்புல்லை உண்பதில் விருப்பமுடையது. முதிய பசு இளம்புல்லைக் கடித்து உண்ண முடியாவிடினும் நாவினால் தடவு மட்டில் ஒருவகை இன்பத்தைப் பெறும். பசுவின் அலை தாடியை அணல் என்பர். அது நிலத்தளவும் நாலும்.

    பசுவின் நிரையோடு ஏறும் இருக்கும்; ஆதலில் அந்நிரையை, “ஏறுடையினம்” என்பர். அவ்வேற்றின் கழுத்தில் மணி கட்டுதல் வழக்கம். இராக் காலத்தில் அம்மணியின் ஒலியைக் கேட்டு தலைவி வருந்துவாள். பசுக்கள் தங்குமிடம் தொழுவம், மன்று, மன்றமெனக் கூறப்படும்.

    எருது உழவிற்குப் பயன்படும். அது வேனில் காலத்தில் உழாது சோம்பி இருக்கும்; வெப்ப மிகுதியினால் மெலிவடையும்.
 
(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 49) - செந்நாய், தவளை, நண்டு, நாய், நீர்நாய்

           குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 49) -  செந்நாய், தவளை, நண்டு, நாய், நீர்நாய்



செந்நாய்

    இது பெரும்பாலும் பாலை நிலத்துக்குரியது; சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் காணப்படும். இது விலங்குகளை வேட்டை யாடி உண்டு சிறு பள்ளத்தில் உள்ள நீரை உண்ணும். புலிக்கு இவ்விலங்கு உணவாகும்.
 
தவளை

    தவளையின் வாய் கிண்கிணியின் வாய்க்கு உவமை கூறப்படுகின்றது. இதன் இனமாகிய தேரை சுனையில் வாழ்வது; பகுவாயை உடையது; தட்டைப் பறையைப் போல ஒலிப்பது.
 
நண்டு

    இது ஞெண்டு எனவும் வழங்கப்படும்; கொக்கிற்கு அஞ்சும்; நீர்த்துறைகளிலுள்ள மரங்களின் வேரில் வளை அமைத்துக் கொண்டு வாழும்; அலைகளால் தன்மனை சிதைக்கப்படும் போது வருந்தி ஓடும். இதன் கால்கள் வளைந்து இருக்கும். கடற்கரையில் விளையாடும் மகளிர் இதனை அலைத்து விளையாடுவர். இதற்கு அலவனாட்டுதல் என்று பெயர். நண்டு ஓடும்பொழுது மணலில் கோடுகள் உண்டாகும்; அவை கோலம் செய்தாற்போலத் தோற்றும். பொன்னிறம் உள்ள கோடுகளை உடைய ஒருவகை நண்டு உண்டு.

நாய்

    தலைவன் வேட்டையாடும் பொருட்டு வருகையில் நாயோடு வருவான். அது கடமா முதலிய விலங்குகளைத் துரத்தி அலைத்து அவனுக்குத் துணை புரியும். சில சாதியினர் தம்முடைய வீடுகளில் நாயை வளர்ப்பர். அவர் வீட்டு வாயிலில் அது காவல் புரியும். அங்ஙனம் நாய் இல்லாத அந்தணர் வீட்டு வாயிலை ஒரு புலவர், “நாயில் வியன்கடை” என்று சிறப்பிக்கின்றார்.
 
நீர்நாய்

    இது நீரில் வாழ்வது; பிரம்பின் தூற்றில் தங்கி இருக்கும். இது வாளை மீனை உணவாகக் கொள்ளும். இதன் உடலிலே கோடுகள் இருக்கும் என்றும் அவை பிரப்பம்பழத்தின் மேலுள்ள கோடுகளைப் போலத் தோற்றுமென்றும் தெரிய வருகின்றது.
 
(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 48) - குரங்கு

                                            குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 48) -  குரங்கு


குரங்கு

    இதில் பலவகைகள் உண்டு. முசுவென்னும் இனத்தின் முகம் கரியதாக இருக்கும். கருங்குரங்கின் உடல் முழுவதும் கரியதாகவும் முகம் வெள்ளியதாகவும் இருக்கும். கருங்குரங்கை ஊகம் என்பர். குரங்கின் பல் கூரியது; வாய் சிவப்பாக இருக்கும். இதன் ஆண் கடுவன் கலை என்றும், பெண் மந்தி என்றும், குட்டி குருளை பறழ் பார்ப்பென்றும் வழங்கப்படுகின்றன. குரங்கு மிக உயர்ந்த மரங்களிலும் ஏறிப் பாயும் இயல்பினது; மாம்பழத்தைக் கடித்து உண்ணும்; பலாப்பழத்தைத் தோண்டிச் சுளையை உண்ணும்; தளிரை மேயும். மகளிர் பாறையில் பரப்பிய தினையை அவர்கள் சோர்ந்த சமயம் பார்த்து மந்தி தன் குட்டிகளோடு கவர்ந்து செல்லும் காட்சி ஒன்றை ஒரு புலவர் அமைக்கின்றார்.

    மந்தி தன் குட்டியை அகனுறத் தழுவிக் கொள்ளும். ஆண் குரங்கும் பெண் குரங்கும் ஒன்றனை ஒன்று காதல் செய்து வாழும் வரலாறுகள் சில இதில் காணப்படுகின்றன; தன்னுடைய கணவனாகிய ஆண் குரங்கு இறந்த பிறகு கைம்மை வாழ்க்கையை விரும்பாத பெண் குரங்கு மரமேறவும் தெரியாத இளைய குட்டியைத் தன் இனத்திடத்தே கையடை கொடுத்த பின்னர் உயிரை மாய்த்துக் கொள்ளும் என்பதும், ஆண் குரங்கு மரத்தின் மேல் இருந்து பழங்களை உதிர்ப்பக் கீழிருந்து மந்தியும் குட்டிகளும் அவற்றைக் கைக்கொண்டு தின்னுமென்பதும் இதற்குரிய உதாராணங்களாம். முசுவின் குருளை பாறையில் மயிலீன்ற முட்டையை அதன் அருமை தெரியாமல் உருட்டி விளையாடுவதை ஒருவர் தெரிவிக்கின்றார். மழைக்குக் குரங்கு அஞ்சும். தானும் தலைவனும் பழகும் இடத்தில் குரங்கு சாட்சியாக இருந்ததென்று ஒரு தலைவி பகர்கின்றாள்.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 47) - எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை

                 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 47) - எலி, எறும்பு, ஓந்தி, கடமா, குதிரை


எலி

    வீட்டில் வளரும் எலியை இல்லெலி என்பர். இதனை யாமத்தில் தேடிக் காட்டுப் பூனை உண்ணும்.
 
எறும்பு

    இந்நூலில் ஒரு செய்யுளில் எறும்பு எறும்பியெனச் சொல்லப்படுகின்றது. இதன் வளையை அளை என்றும் கூறுவர்; அது மிகவும் சிறியது. குறிஞ்சி நிலத்தில் பாறைகளில் உள்ள குறுஞ்சுனைகளுக்கு அவ்வளைகள் உவமையாகக் கூறப்படுகின்றன.
 
ஓந்தி

    இது பாலை நிலத்தது. இதன் முதுகிற்குக் கருக்கரிவாளை ஒரு புலவர் உவமை கூறுகின்றார். இதன் ஆணைப் போத்தென்றல் மரபு. பாலை நிலத்தில் செல்வார் பார்க்கும் நிமித்தத்திற்குரிய பொருள்களுள் இதுவும் ஒன்று.
 
கடமா

    கடமை, கடமா என்பன ஒரு பொருட்சொற்கள். இவ்விலங்கு தினைக்கொல்லையில் புகுந்து தினையை உண்ணும். வேட்டுவர் இதனை அலைத்து வேட்டையாடுவர்.
 
குதிரை

    குதிரையை மக்கள் பலவாறு பயன்படுத்திக் கொள்வர். தனியே ஏறிச் செலுத்துவதும், தேரில் பூட்டிச் செலுத்துவதும் உண்டு. போரில் குதிரைப்படை ஒரு பிரிவாகும். தேரில் பூட்டிய குதிரையின் வேகத்திற்குக் காற்றை உவமிக்கின்றார் ஒரு புலவர். போர்க் குதிரை துள்ளி எழுவதை மற்றொரு புலவர் குறிக்கின்றார்,

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) - அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை

           குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 46) -  அணில், ஆடு, ஆமான், ஆமை, எருமை


1விலங்குகள்
(1. ஊர்வனவும், நீரில் வாழ்வனவும் இவ்வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.)

அணில்

    இது மக்கள் நிறைந்துள்ள இடத்தில் வருவதற்கு அஞ்சும்; அவர்கள் இல்லாத இடத்தில் விளையாடும். “மக்கள் போகிய வணிலாடு முன்றில்” என்று ஒரு பாழிடம் கூறப்படுகின்றது. இதன் பல் கூரியது.
 
ஆடு

    வெள்ளாட்டினை வெள்ளை என்று கூறுவர். அது சிறிய தலையை உடையது. ஆட்டு மந்தையைக் கொக்கின் கூட்டத்திற்கு உவமையாக ஒருவர் கூறுவர். குறிஞ்சி நில மாக்கள் ஆட்டுக் குட்டியைப் பலியிட்டு வெறியாடுவர்.
 
ஆமான்

    காட்டுப் பசுவை ஆமான் என்பர். அமர்த்த கண்ணை உடையது இது. வேட்டுவரால் அலைக்கப்பட்ட ஆமானினது கன்று கானவர் வாழும் ஊரில் புக்கு அவர் குடியில் பழகி வளரும்.
 
ஆமை

    ஆமையின் பிள்ளையைப் பார்பென்றல் மரபு. அது தாய் முகம் நோக்கி வளர்வது. “யாமைப் பார்ப்பி னன்ன காமம்” என்று அதனைக் காமத்திற்கு உவமை கூறுவர் ஒரு புலவர்.
 
எருமை

    மருத நிலத்தில் உழவர்களால் வளர்க்கப்படுவது. இதன் கழுத்தில் மணி கட்டுவது வழக்கம். கன்றை ஈன்ற எருமை உழவனால் தனியே கட்டப்பட்ட அக் கன்றை விட்டு அகலாது அருகில் உள்ள பயிரை உண்ணும் என்று அதன் அன்பு ஒரு பாட்டில் விளக்கப்பட்டிருக்கின்றது. இது நடுயாமத்தில் கரைவதனால் தலைவி துயர் உறுவதாகக் கூறுதல் புலவர் வழக்கம்.
 
(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 45) - வாகை, வாழை, வெட்சி, வேங்கை, வேம்பு

                  குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 45) -  வாகை, வாழை, வெட்சி, வேங்கை, வேம்பு


வாகை

     இம் மரம் பாலை நிலத்துக்கு உரியது; உழிஞ்சில் என்பதும் இதுவே என்று தோற்றுகின்றது. இதன் பூ மணமுடையது. அதற்கு மயிலின் கொண்டையை உவமை கூறுவர். இதன் காய் முற்றி நெற்றாகிக் காற்றால் அலைக்கப்பட்டு ஒலிக்கும். அவ்வொலிக்குப் பறையொலியும் சிலம்பொலியும் ஒப்பிடப்படும். இதன் நெற்று வெண்ணிறம் உடையது. இதன் விதையை அரிசி என்பர்.
 
வாழை

    வாழைமரமடர்ந்த இடத்தைச் சோலையென்பதும் மரபு. இதன் குருத்திற்கு நுகும்பு என்பதும் ஒரு பெயர். அது சுரிந்திருக்கும். அக்குருத்தைத் தடவுதலால் யானை வலியழியும். மலையில் உள்ள வாழை அருவியால் அடித்து வரப்படும். மகளிர் மென்மைக்கு இதன் மென்மை உவமையாகும்.
 
வெட்சி

    காட்டில் வளரும் மரங்களுள் ஒன்று; வளைந்த கிளையை உடையது. இதன் மலரை தம் கூந்தலில் அணிவர்.
 
வேங்கை மரம்

    இம்மரம் குறிஞ்சி நிலத்துக்குரியது. இதன் அடி கரிய நிறமுடையது. இதன்மேல் மயில் இருக்கும். யானையால் மிதிக்கப்பட்ட வேங்கை சாய்ந்து, மகளிர் நின்றவாறே கொய்தற்குரியதாக இருக்கும் செய்தி ஒன்றை ஒரு புலவர் கூறுகின்றார். மகளிர் இம் மரத்தின் மேலேறிப் பூக்கொய்வர். குறிஞ்சி நிலத்தில் உள்ள மன்றங்களிலும் இம் மரம் இருக்கும். இது மலர்ந்த காலத்தில் சிறுவர்கள் இதன்மேல் ஏறாமல் கீழே இருந்தவாறே, “புலி புலி” என்று ஆரவாரிப்பர். கற்களுக்கு இடையிலும் அருவியின் அருகிலும் இது வளரும். மேல் காற்றால் முறிந்து வீழும். இதன் மலர்த்தொகுதிக்குப் புலியை உவமை கூறுவர். பொதியில் மலையிலுள்ள வேங்கை ஒரு செய்யுளில் சிறப்பிக்கப் பெறுகின்றது. இதன் மலர் மணமுடையது மகளிரால் கூந்தலில் அணியப்படுவது.
 
வேம்பு

    பாலை நிலத்தில் காணப்படுவது. இளவேனில் காலத்தில் மலரும். இதன் அடிமரம் கரிய நிறமுடையது. இதன் பூவைப் பனந்தோட்டில் வைத்து ஆடவர் சூடுவர். இதன் பழத்தைக் கிளி உண்ணும்; அப்பழத்திற்குப் பொற்காசு உவமிக்கப் படுகின்றது.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 44) - யாமரம், வரகு, வழை, வள்ளி

                     குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 44) -  யாமரம், வரகு, வழை, வள்ளி


யாமரம்

    இம்மரம் பாலை நிலத்துக்குரியது. வயிரமுடையதாகவும் பொரிந்த அடியை உடையதாகவும் கூறப்படும். யானை இதன் பட்டையை உரித்து உண்டு, அதில் உள்ள நீரினால் நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளும். சிறுபான்மை குறிஞ்சி நிலத்திலும் இது காணப்படும். அங்கே கானவர் இதனை வெட்டி விட்டுத் தினையை விதைப்பர்.
 
வரகு

    இது முல்லை நிலத்தில் பயிர் செய்யப்படுவது; கார்காலத்தில் தளிர்த்து விளங்கும். செம்மண் மேட்டில் நன்றாக வளரும்; மானுக்கு உணவாகும். இதன் கதிரை அரிந்த தாள், “குறைத்தலைப் பாவை” என்று கூறப்படுகின்றது. அத்தாளில் முல்லைக் கொடி படரும்.
 
வழை

    இது குறிஞ்சி நிலத்தில் வளரும் மரங்களில் ஒன்று. இது வளர்ந்த இடத்தை “வழையம லடுக்கம்” என்று ஒரு புலவர் சிறப்பிக்கின்றார்.
 
வள்ளி

    இது கிழங்கை உடையதொரு கொடி. இது படர்ந்த இடம், “வாடா வள்ளியங்காடு” என்று பாராட்டப் பெறுகின்றது.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 43) - முள் முருங்கை, முள்ளிச்செடி, மூங்கில்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 43) -  முள் முருங்கை, முள்ளிச்செடி, மூங்கில்

முள் முருங்கை

    இம்மரம் கவிரென்று வழங்கப்படுகின்றது. இதன் சிவந்த மலரின் இதழ் நாரையின் மெல்லிய இறகிற்கு உவமையாகச் சொல்லப்படும்.
 
முள்ளிச் செடி

    நெய்தல் நிலத்தில் காணப்படுவது; இது முண்டகமென்றும் வழங்கும். இதன் மலர் மிக்க குளிர்ச்சியை உடையது. இச்செடியில் உள்ள முள் வளைந்திருக்கும்; அதற்கு அணிலின் பல்லை உவமிப்பர். அதன் மலரில் தாது நிறைந்திருக்கும். அது கரிய நிறம் உடையது.
 
மூங்கில்

    மூங்கிலில் பல வகை உண்டு. குறிஞ்சி நிலத்தில் மிகுதியாகவும் பாலை நிலத்தில் சிறிதளவாகவும் காணப்படும். அமை, கழை, பணை, முந்தூழ், வெதிர், வேய், வேரலென்னும் இதன் பெயர்கள் இந்நூலில் வந்துள்ளன. இயல்பாக வளர்ந்த மூங்கில் தொகுதியே மலைச்சாரலில் வேலி போல அமைந்திருக்கும். மூங்கில் அடர்ந்த இடத்தைச் சோலையென்று கூறுவதும் உண்டு. மூங்கிலை யானை உவந்துண்ணும். இதனை யானை வளைத்து விடுங்கால் மீனெறி தூண்டிலைப் போலவும் செலுத்தி விட்ட குதிரையைப் போலவும் விரைந்து மேலெழும்பும் காட்சியைச் சில புலவர் புனைந்து கூறியுள்ளனர். மலைச் சாரலில் மூங்கில் மிக உயர்ந்து மேலே உள்ள தேனடையைக் கிழித்து நிற்குமொரு செய்தி ஒரு செய்யுளில் காணப்படும். இதனை மகளிர்தோளுக்கு உவமிப்பர். முள்ளில்லாத மூங்கிலும் உண்டு.

    பாலை நிலத்தில் உள்ள மூங்கில் உலர்ந்து போய் வளர்ச்சி பெறாமல் கூழையாக நிற்கும். மலைத்தேனை எடுப்பதற்கு ஒற்றை மூங்கில் கண்ணேணியாகப் பயன்படும்.


(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 42) - முல்லை

                                 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 42) - முல்லை



முல்லை

    முல்லை நிலத்துக்குரிய அடையாளமாக விளங்குவது இது; மழை பெய்யும் கார் காலத்தில் வளம் பெற்று மாலைக் காலத்தில் மலர்வது. முல்லை மலர்வதனால் தலைவி கார் காலத்தின் வரவை அறிவாள். சில இடங்களில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்களில் படரும்படி முல்லையை வளர்ப்பர். அம்மலரைப் பறித்து மகளிர் அணிந்து கொள்வர்.

    தலைவன் தான் சென்ற வினையை முடித்து வருகையில் இடையிலே உள்ள முல்லை நிலத்தில் முல்லைக்கொடிகள் பூத்து நிற்பது கண்டு, “யான் உரியகாலத்தே தலைவிபாற் சென்றிலே னென்று கார்காலம் முல்லையரும்பாகிய பற்களைக் காட்டிச் சிரிக்கின்றது” என்று கூறுவதாக ஒரு புலவர் அமைக்கின்றார். கதிரை அறுத்த வரகின் தாளிலும் துறுகல்லிலும் முல்லைக் கொடி படர்ந்து மலரும். முல்லை அரும்பிற்கு மகளிர் பல்லும் காட்டுப் பூனையின் பல்லும் நட்சத்திரங்களும் ஒப்பிடப்படுகின்றன. ஆடவர் மேனியும் உத்தம மகளிர் நுதலும் முல்லையின் மணத்தை உடையன என்பர். இதன் மலரை இடையரும் சூடுவர். முல்லை, காந்தள், குவளை என்பவற்றைச் சேர்த்து மாலையாகக் கட்டுதல் வழக்கம். செம்முல்லை தளவெனப்படும்.

(தொடரும்).

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 41) - மருத மரம், மாணைக்கொடி, மாமரம், மிளகுக்கொடி

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 41) - மருத மரம், மாணைக்கொடி, மாமரம், மிளகுக்கொடி


மருத மரம்

    மருத நிலத்துக்குரிய மரம் இது; நீர்த்துறைகளில் வளர்வது. இதன் மலர் செந்நிறம் உடையது; நீர்த்துறைகளில் நீராட வரும் யானைகளை இம்மரத்தில் பிணித்தல் வழக்கம்.
 
மாணைக் கொடி

    குறிஞ்சி நிலத்தில் வளரும் பெரிய கொடி வகைகளுள் ஒன்று. குண்டுக் கல்லின் அருகே படர்ந்த இக்கொடி அயலில் தூங்கும் களிற்றின் இவருமென ஒரு செய்தி ஒரு செய்யுளில் கூறப்பட்டுள்ளது.
 
மாமரம்

    இம்மரம் பெரும்பாலும் மருத நிலத்துக்குரியது; சிறுபான்மை கடற்கரையில் இருப்பதாகக் கூறப்படும். தேமா என்பது மாவில் ஒரு சாதி. அதன் பழத்தை, “பால்கலப் பன்ன தேக்கொக்கு” என ஒரு புலவர் சிறப்பிக்கின்றார். பொய்கை அருகில் உள்ள மாவின் பழம் அப்பொய்கையில் விழுதலும், அதனை வாளைகள் கவ்வி உண்ணுதலும், வௌவால்கள் மாம்பழத்தை உண்ணுதலுமாகிய செய்திகள் இந்நூலில் காணப்படும். குயில் மாவின் பூந்தாதைக் கோதும். மாம்பூவில் வண்டு விழுந்து பயிலும். இதன் பூந்தாதுக்குப் பொன் உவமை கூறப்படும். இதன் தளிரை மகளிர் அடிக்கும் மேனிக்கும் ஒப்புக் கூறுவர். மாவின் வடு நறுமணம் உடையது.
 
மிளகு கொடி

    மலைப்பக்கத்தில் வளர்வது. அதனால் “கறிவள ரடுக்கம்” என்று புலவர் மலைச் சாரலைச் சிறப்பிப்பர்.

(தொடரும்)


சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...