திங்கள், 26 அக்டோபர், 2015

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)

                                    குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 5)

மருதம்
            வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதமாகும். இந் நிலத்து ஊர்களில் நாகரிகம் மிக்க மக்கள் இல்லறம் நடத்தும் செய்திகளைப் புலவர்கள் புனைந்துரைக்கின்றனர். மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவான்.
      உழவர் தம்மேல் பூந்தாது படியும்படி காஞ்சி மரக் கிளையை வளைப்பதும், எருமைக் கன்றைக் கட்டி வைப்பதும், ஒற்றை ஏருடைய உழவன் ஈரம் உண்டான நிலத்தில் விதைக்க விரைவதுமாகிய செய்திகள் இந்நூலில் காணும் மருத நில நிகழ்ச்சிகளாம்.

(தொடரும்)

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 4)


குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 4)

  முல்லை
            காடும் காட்டைச் சார்ந்த இடங்களும் முல்லையாகப் பகுக்கப் பட்டிருக்கின்றன. இந்நிலம் கார் காலத்தில் வளம் பெற்றுத் திகழும். இங்கே செம்மண் பரந்திருத்தலின் இந்நிலத்தைச் செம்புலமென்பர். இங்குள்ள ஊரைச் சீறூரென்று கூறுவர்.
    இங்கே வாழ்பவர் இடையர். அவர்கள் ஆடுகளையும் பசுக்களையும் மேய்ப்பர். புனத்தையுழுது வரகு முதலியவற்றை விதைப்பர். மழையின் பொருட்டுத் தலையில் கவிழ்த்தற்குப் பறியோலையை வைத்திருப்பர். அவர்கள் இராக்காலத்தே ஆடுகளோடு மேய்ப்புலத்தே தங்கி விடுதலும் உண்டு. அவர்களுக்குப் பாற்சோறு உணவாகும்.

    இந்நிலத்திற்குரிய முல்லை மலரைப் பற்றிய செய்திகள் பலபடியாகச் சொல்லப்படுகின்றன.
(தொடரும்)

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 3)

குறுந்தொகை : நூலாராய்ச்சி (பகுதி - 3)  
பாலை
    குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் தம் இயல்புதிரிதலால் பாலை நிலம் (சிலப். 11; 64-7 ) உண்டாகும் என்பர். இங்ஙனம் காலவிசேடத்தால் குறிஞ்சி திரிந்த பாலை,
வேனிற் குன்றத்து வெவ்வரைக் கவாஅன்    (396)
என்று குறிக்கப் பெறுகின்றது. இந்நூலில், பாலை நிலத்தில் வெம்மை மிகுதியினால் நீர் நிலைகள் வற்றி உலர்ந்தும், மரம் முதலியன அழிந்தும் உலர்ந்தும், பொலிவிழந்தும், விலங்கினங்கள் வலியழிந்தும் காட்சி அளிக்கின்றன. நீரில் வைப்பும், புலர்ந்த சுனையும், அறுசுனையும் பாலை நிலத்தின் நிலையைப் புலப்படுத்துகின்றன. மிக அருமையாகச் சில இடங்களில் மட்டும் சிறு பள்ளங்களில் சிறிதளவு நீர் தங்கியிருக்கும்; அந்நீர் மிகவும் கலங்கியும் மிக்க வெம்மையுற்றும் இருக்கும். அதன் வெம்மை ஒருமுறை சொல்லியமையாமையால், வெவ்வெங் கலுழி என ஒரு புலவர் சொல்லுகின்றார். அருகில் உள்ள செடியின் மலர்கள் விழுந்து அழுகிப் போன நாற்றத்தோடு சிறிதளவு நீருள்ளதொரு பள்ளத்தைப் பற்றி ஒரு புலவர் பாடுகின்றார். முற்கூறிய வெவ்வெங்கலுழியையும் அந்நாற்ற நீரையும் தலைவனோடு செல்லும் தலைவி விருப்பத்துடன் உண்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம். அந்தக் கலங்கள் நீருக்கு அவ்விருவரிடையே உள்ள அன்பு ஒரு சுவையை உண்டாக்குகின்றது. பாலை நிலத்திலே தருமத்தின் பொருட்டு நெல்லி மரம் வளர்க்கப்பட்டிருக்கும். அதனை, “அறந்தலைப் பட்ட நெல்லி என்று ஒரு நல்லிசைப் புலவர் புனைகின்றார். வழிப்போவார் அதன் காயை உண்டு விடாய் தணித்துக் கொள்வர். உடலும் உள்ளமும் உயிரும் வெம்மையால் தீகின்ற பாலை நிலத்திலே அன்பும் அறமும் பிற இடங்களைக் காட்டிலும் சிறந்து நிற்கின்றன.
    நிழலும் நீரும் இன்றி வெம்மையும் தனிமையும் உடையதாதலின் பாலை இன்னா வைப்பென்று கூறப்படும். வழிச்செல்வோர் ஒரு துணையும் இன்றிப் பருந்தின் ஒலியை உசாத்துணையாகக் கொள்வராம். உப்பு வாணிகர்கள் கூட்டமாகச் சேர்ந்து உப்பு வண்டிகளை இந்நிலத்து வழியே ஓட்டிச் செல்வர்.
            பாலை நிலத்து வாழ்வாரை எயினர் என்பர். அவர் ஆறலைத் துண்ணும் தொழிலினர். அவர் தம் அம்பைப் பாறையில் தீட்டித் தம்முடைய நகத்திற்புரட்டிக் கூர்மை பார்ப்பர். வழிப் போவாரைச் சிறிதும் இரக்கமின்றி கொன்று அவருடைய உடலின் மீது தழைக் குவியல்களையும் கற் குவியல்களையும் இட்டு மறைப்பர். மரக்கிளைகளில் ஏறி யாரேனும் வருகிறார்களாவெனப் பார்ப்பர். அம்பால் மரத்தின் மேலுள்ள கனிகளை உதிர்ப்பர். மரப்பட்டையை மென்று நீர் வேட்கையைத் தணித்துக் கொள்வர். வேலேந்தி வணிகர் கூட்டத்தினரைக் கொள்ளையிட்டுச் செல்வர். அப்பொழுது தண்ணுமையை முழங்குவர்.
            இந்நிலத்தில் உள்ள விலங்கினங்கள் ஒன்றனோடு ஒன்று அன்பு பூண்டு இயங்கும் காட்சிகள் சிலவற்றை இந்நூலிற் காணலாம். தன்னுடைய பிடியின் பசியை முதலில் நீக்கும் பொருட்டு ஆண்யானை மரப்பட்டையை உரிப்பதும், கலைமான் மரப்பட்டையைக் காலால் உதைத்து அதனைத் தன் மறிக்குக் கொடுத்து அதற்கு நிழலாக நிற்பதும் இதற்கு உதாரணங்களாகும். தன் பசியையும் கருதாமல் தன் குட்டிக்கு உணவு கொடுத்து ஏதேனும் எஞ்சி இருந்தால் உண்டு விட்டு வேனிற் கதிரின் வெம்மையைத் தான் தாங்கித் தன் மறிக்கு நிழலாக நிற்கும் அக் கலையின் நெஞ்சை, "வழுவினெஞ்சு’’ என்று புலவர் பாராட்டுகின்றார். வேனில் வெம்மையிலே அதன் அன்பு உருகி இலங்கு வதைக் காணும்போது யாவற்றையும் அன்பினால் பிறர்க்கு ஆக்கும் சிறந்த உள்ளத்தைப் பாராட்டாமல் இருக்க இயலுமா? ‘’தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்ஆகும் சிறந்த குணத்தை அம்மானிடத்தே ஏற்றிக் கூறிப் பாராட்டும் புலவரை நாம் பாராட்டுவோமாக.
    பொருள் தேடச் செல்லும் தலைவன் பாலை நிலத்தின் வழியாகச் செல்வதாகவும், தலைவன் தலைவியோடு பாலை நிலத்தின் வழியே தன்னூர் சென்று மணம் புரிவதாகவும் செய்யுள் செய்தல் புலனெறி வழக்கம். முன்னது அறத்தின் பொருட்டு எத்தகைய துன்பத்தையும் பொறுக்கும் ஆற்றலையும், பின்னர் அன்பின் பொருட்டு எல்லா இடையூற்றையும் தாங்கும் மனவலிமையையும் விளக்குகின்றன.

    பாலை நிலத் தலைவன் பெயர்களுள் காளை, விடலை என்பவற்றை இந்நூலில் காணலாம்.

(தொடரும்)

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...