செவ்வாய், 28 டிசம்பர், 2010

அகநானூறு - நித்திலக்கோவை- ந.மு.வே. உரைப் பதிப்பு 1957

          அகநானூறு மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிந்ததே ( முதல் பகுதி களிற்றியானைநிரை (1-120 பாடல்கள்), இரண்டாம் பகுதி மணிமிடைபவளம் (121-300 பாடல்கள்), மூன்றாம் பகுதி நித்திலக்கோவை (301-400 பாடல்கள்). ந.மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தை ஆர்.வேங்கடாசலம் ஆகியோர் இணைந்தெழுதிய அகநானூறு முழுமைக்குமான முதல் உரையின் மூன்றாம் பகுதி 1944 அக்டோபரில் முதற்பதிப்பாக வெளிவந்தது. அதன் மறுபதிப்புக்கள் 1951 சூலையிலும், 1957 மார்ச்சிலும் வெளிவந்தன. ஒவ்வொரு பகுதியிலும் பாட்டு முதற்குறிப்பு, ஆசிரியர் பெயர்வரிசை ஆகியன தரப்பட்டுள்ளன. அகநானூறு முழுவதும் ஒரே புத்தகமாக வெளிவரும்போது நூல்வரலாறு, உரைவரலாறு, அரும்பொருட்குறிப்பு ஆகியன சேர்க்கப்பெறும் என்பது 1957 ஆம் ஆண்டுப் பதிப்பின் பதிப்புரை தரும் செய்தியாகும். 1957 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்பு பக்கம் இது.

திங்கள், 27 டிசம்பர், 2010

நற்றிணை - பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1915) உரைப்பதிப்பு

      1862 செடம்பர் 10 ஆம் நாள் பிறந்த பின்னத்தூரார் நற்றிணைக்கு உரையெழுதி அச்சுக்குக் கொடுத்திருந்தார் அந்நூல் அச்சாகி வெளிவரும் முன்னரே 1914ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30ஆம் நாள் இயற்கையெய்தினார். பாடினோர்பாடப்பட்டோர் வரலாறு ஆகியன அதற்குப் பின்னரே அச்சிடப்பட்டு நற்றிணை வெளிவந்தது. குறுந்தொகையைப்பொருத்தவரையில் உரையெழுதும் முயற்சியை அவர் மேற்கொள்ளவில்லை.நற்றிணை முழுமைக்கும் உரையெழுதிய பின்னத்தூரார் அகநானூற்றின் சில
பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.

        நற்றிணைக்கு முதற்கண் திணைவகுத்துமுதன்முதலாக உரையெழுதிமுதற்பதிப்பாசியராகவும் விளங்கிய பின்னத்தூராரும் குறுந்தொகைக்கு முதற்கண் திணைவகுத்துமுதன்முதலாக உரையெழுதிமுதற்பதிப் பாசியராகவும் விளங்கிய தி.சௌ.அரங்கனாரும் சமகாலத்தவர் என்ற செய்தி இவண் நினையத்தக்கது.

      பின்னத்தூரார் உரையின் உரிமையைப் பெற்ற திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் அவ்வுரையை அவர் வெளியிட்டவாறே 1952 மார்ச்சில் கழக முதற்பதிப்பாக வெளியிட்டனர். அது 1956 ஆகச்டில் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. 1962சனவரியில் கற்பார் எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டுப் பொ.வே.சோமசுந்தரனாரைக் கொண்டு பொழிப்புரையைப் பதவுரையாக மாற்றியும்,  இலக்கணக் குறிப்புஆய்வுரை ஆகியவற்றை எழுதிச்சேர்த்தும் திருத்திய மூன்றாம் பதிப்பாக வெளியிட்டனர். அதன் தலைப்புப் பக்கம் வருமாறு:
                                                      

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஐங்குறுநூறு - பொ.வே.சோ. உரைப்பதிப்பு 1961

         ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரை உ.வே.சாமிநாதையர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. ஔவை துரைசாமிப் பிள்ளை புத்துரை ஒன்று எழுதியுள்ளார். கழகம் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களைக் கொண்டு உரை ஒன்றை எழுதுவித்து வெளியிட்டுள்ளது. அதன் முதற்பதிப்பு 1961 அக்டோபரில் வெளிவந்தது. ஐங்குறுநூற்றுப் பதிப்போடு பதினெண்மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்கள் உரையோடு வெளிவந்து நிறைவுறுகின்றன என்பது அந்நூலின் பதிப்புரை தரும் செய்தியாகும்.

          1.தலைப்பு, 2. தலைப்பு விளக்கம், 3. பாடல், 4. கூற்று, 5. கூற்று விளக்கம் ( துறை விளக்கம் என்பார் பொ.வே.சோ.), 6.பழைய உரை, 7.பதவுரை ( சொற்பொருள் என்பார் பொ.வே.சோ.), 8. விளக்கம், 9. பாடவேறுபாடு (பாடபேதம் என்பார் பொ.வே.சோ.) ஆகிய உரைக்கூறுகளைக் கொண்டது  பொ.வே.சோ.வின் உரைப்பதிப்பு. 1961 ஆம் ஆண்டுப் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.


சனி, 25 டிசம்பர், 2010

பத்துப்பாட்டு - உ.வே.சா. பதிப்பு 1961

             சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கத்தொடங்கியது உ.வே.சா. அவர்களுக்கும், தமிழ்ப் பதிப்பு வரலாற்றுக்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்கியது என்பது வரலாறு காட்டும் உண்மை. அவ்வகையில் சீவக சிந்தாமணியை ஆராய்ந்து வந்தகாலத்தில் உ.வே.சா. அறிந்துகொண்ட நூல்களுள் ஒன்று பத்துப்பாட்டு. அக்காலத்தில் சங்க நூல்கள் எவையெவை என்ற தெளிவு பெரும்புலவர்களுக்கும் இருந்ததில்லை என்பதை உ.வே.சா.வின் என் சரித்திரத்தால் அறியலாம்.

           பத்துப்பாட்டின் மூலப்பகுதி தனியே கிடைக்காமையால் உரையிலிருந்தும், உரைமேற்கோள்களிலிருந்தும் மூலபாடத்தைப் பெயர்த்து எழுதிக்கொண்டார் உ.வே.சா.  பின்னர்க் கிடைத்த சிலசுவடிகளில் சிலபாடல்களின் மூலப்பகுதிகள் கிடைத்தன. இவற்றைக்கொண்டு முன்பு எழுதிவைத்த பகுதிகளைத் திருத்தம் செய்துகொண்டார். சில சிறுதொடர்களுக்கு அவற்றின் உரைப்பகுதி கிடைக்கவில்லை. எனினும் பத்துப்பாட்டு மூலம், உரை ஆகியன 1889 ஆம் ஆண்டில் முதற்பதிப்பாக உ.வே.சா.வால் வெளியிடப்பட்டன. அதன் இரண்டாம் பதிப்பு 1918-லும்,  மூன்றாம் பதிப்பு 1931 - லும் வெளிவந்துள்ளன. இரண்டாம் பதிப்பைக்காட்டிலும் மூன்றாம் பதிப்பில் 300 பக்கங்கள் அதிகமாக இருப்பதினாலேயே இதிற் பல புதிய விசயங்கள் சேர்க்கப்பெற்றுள்ளனவென்பதை அறிஞர்கள் அறிந்துகொள்வார்கள் என மூன்றாம் பதிப்பின் முகவுரையில் உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

              உ.வே.சா.அவர்கள் காலத்தில் வெளிவந்த மூன்றாம் பதிப்பு, 1961இல் தியாகராச வெளியீடாக 1961 மீண்டும் வெளியிடப்பட்டது. அதன் தலைப்புப் பக்கம் இது.


வெள்ளி, 24 டிசம்பர், 2010

சங்க இலக்கியம் - வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1967

          சங்க இலக்கியம் என்ற பெயரிய பதிப்பு ஒன்று 1940இல் சைவசித்தாந்த மகா சமாசத்தால் வெளியிடப்பட்டது. அறிஞர் கழகம் ஆராய்ந்து உருவாக்கிய அப்பதிப்பின் தொகுப்பாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் அமைந்தவர் வையாபுரிப்பிள்ளை ஆவார்.  இப்பதிப்பு திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதற்காக 1933 முதல் பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அதன் விளைவாகச் சங்கநூற் புலவர்கள் பெயர் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டு அது அவ்வாண்டில் வெளிவந்த தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையின் பொன்விழா மலரில் வெளியிடப்பட்டது.  பின்னர்ச்  சைவசித்தாந்த மகா சமாசத்தால் 1934- லில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதனைக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் பலரும் அவ்வரிசையிலேயே சங்க நூல்களை மூலமும் உரையுமாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளைச் சமாசத்திடம் முன் வைத்தனர்.  இதனை ஏற்றுக்கொண்ட சமாசத்தினர் அதன் முதற்படியாக மூலத்தை மட்டும் செம்மையாக அச்சிட முடிவு செய்தனர். கிடைக்கின்ற சுவடிகள், அச்சுப்படிகள் கையெழுத்துப் படிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு,  அவற்றை ஒப்புநோக்கி சிறந்தபாடங்களைக் கண்டு அமைத்தனர். சங்க இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு சிறுகருவியே இப்பதிப்பு என்ற குறிப்புடனும், இதனைக் குறிப்பு நூலாகக் கருத வேண்டுமேயொழிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முலமும் உரையுமாக வெளிவந்துள்ள அருமையான பதிப்புக்களுக்குப் பதில் இதைப் பயன்படுத்தலாம் எனக் கனவிலும் எண்ணி ஏமாற்றமடைதல் கூடாது என்ற எச்சரிக்கைக் குறிப்புடனும் வெளிவந்துள்ள இப்பதிப்பு புலவர் பெயரடைவில் சங்கப் பாடல்களைத் தொகுத்துத் தந்த முதற்பதிப்பாகும்.

             சங்க இலக்கியப் பதிப்பு மூலம் மட்டுமே கொண்ட பதிப்பாகும். பல்வகையானும் சிறப்புடைய இப்பதிப்பு இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் 1967-லில் சென்னை பாரி நிலையத்தால் இரண்டாம் பதிப்பாக வண்டுள்ளது. அமைப்பு முறையில் முதற்பதிப்பிலிருந்து சிற்சில மாறுதல்களடன் வெளிவந்துள்ள இதன் தலைப்புப் பக்கங்கள் வருமாறு :



தொல்காப்பியம் - பி.சா.சு. உரைப்பதிப்பு 1937

          தொல்காப்பியம் ஏறத்தாழ 200 பதிப்புக்களைக் கண்ட தமிழ்ப்பெருநூலாகும். அந்நூற்குப் பலரும் தத்தம் நோக்கில் உரையெழுதி வருகின்றனர். ஒவ்வொருவருடைய நோக்கமும் தொல்காப்பியர் கூறியகருத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பதே. அதனாலேயே அந்நூற்கு உரைகள் பல்கியுள்ளன. அவ்வகையில் பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தைக் குறிப்புரையுடன் 1937 -லில் வெளியிட்டார்.

             திருப்பனந்தாள் காசிமடத்தின் தலைவர் சுவாமிநாதத் தம்பிரான் அவர்களின் பொருளுதவியைக் கொண்டுப் பி.எசு. சுவாமிநாதனால் பதிப்பிக்கப்பட்ட இப்பதிப்பைச் சுவாமிநாதத் தம்பிரானுக்கே உரிமையாக்கியுள்ளார் இக்குறிப்புரைகாரர்.  இந்நூலில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தனித்தனியே தலைப்புப் பக்கங்கள் தரப்பட்டுள்ளன.

           குறிப்புரை என உரைகாரர் கூறினாலும் இவ்வுரை பொழிப்புரை, விளக்கவுரை ஆகியவற்றைக் கொண்டதாகும். பாடவேறுபாடுகளும் தரப்பட்டுள்ளன. இப்பதிப்பின் தலைப்புப் பக்கங்கள் வருமாறு:  





வியாழன், 23 டிசம்பர், 2010

குறுந்தொகை - தமிழண்ணல் உரை 2002

       குறுந்தொகை சங்க நூல்களில் மிகுதியான உரைகாரர்களால் எடுத்தாளப்பெற்ற நூல் மட்டுமல்ல, மிகுதியான பதிப்புக்களைப் பெற்ற நூலுமாகும். அவ்வகையில்  கோவிலூர் மடாலயம் சங்க நூல்கள் மக்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்ற நோக்கத்தில் சந்திபிரித்த மக்கள் பதிப்புக்களை வெளியிட்டது.   அப்பதிப்பு வரிசையில் பெரும்பேராசிரியராகிய தமிழண்ணல் அவர்கள் குறுந்தொகைக்கு உரையெழுதியுள்ளார்.  மக்கள் பதிப்பு எனச்சுட்டப்பெறும் இச்சங்க நூற்பதிப்புக்களுக்குத் தமிழண்ணல், சுப.அண்ணாமலை ஆகியோர் முதன்மைப் பதிப்பாசிரியர்களாவர்.

       1. கூற்றுத் தலைப்பு, 2. கூற்று, 3. கூற்று விளக்கம், 4. பாடல், 5. திணை,புலவர் பெயர், 6. கொண்டுகூட்டு, 7. தெளிவுரை, 8. அருஞ்சொற்பொருள், 9. சிறப்புக்குறிப்பு ஆகிய உரைக்கூறுகளைக் கொண்டது குறுந்தொகை உரைப்பதிப்பாகும். 2002 ஏப்பிரல் எனப் பதிப்பாண்டு குறிக்கப்பட்டுள்ள இதன் தலைப்புப் பக்கம் இதோ. 

குறுந்தொகை - சுஜாதா அறிமுக விளக்கப்பதிப்பு 2006


          குறுந்தொகைக்கு வாணியம்பாடி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்த அரங்கசாமி ஐயங்கார் 1915 ஓர் உரையெழுதிப் பதிப்பித்திருப்பதாகத் தெரிகிறது.  உ.வே.சாமிநாதையர் 1937இலில் பதிப்பித்த விரிவான உரைதான் நமக்குக் கிடைத்த சொத்து. அது இல்லையேல் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம். குறுந்தொகையில் உ.வே.சா. உரைதான் மிகச் சிறந்தது. அவ்வுரையிலிருந்து மாறுபட அசாத்திய தைரியம் வேண்டும். உ.வே.சா. உரை பாடலின் முழுத் தாக்கத்தையும் உணர்ந்துகொள்ளும் சுதந்திரத்தைக் குறைக்கின்றது. குறுந்தொகைப் பாடல்களைச் செய்யுள்களாகப் பார்க்காமல் கவிதைகளாகப் பார்ப்பதற்கு உரைகாரர் சிலசமயம் தடையாக இருக்கின்றார். ஒவ்வொரு பாடலையும் ஆசுப்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பரிவும் பிரிவும் துரோகமும் நட்பும் கொண்ட நவகவிதைகளாகப் பார்க்கவைப்பதே இந்நூலின் குறிக்கோள் எனக்கூறும் சுஜாதா குறுந்தொகைக்கு எளிய அறிமுகம் ஒன்றைத் தந்துள்ளார். அப்பதிப்பு 2006 திசம்பரில் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. குறுந்தொகை முழுமைக்குமான எளிய புதுக்கவிதை அறிமுகமாக அமைந்த அதம் தலைப்புப் பக்கம் இது.

புதன், 22 டிசம்பர், 2010

குறுந்தொகை - துரை. இராசாராம் தெளிவுரைப் பதிப்பு 2005

          குறுந்தொகைக்குக் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஒய்வுபெற்ற தமிழாசிரியர் துரை இராசாராம் எழுதிய தெளிவுரை, சென்னை திருமகள் நிலையத்தால் 2005 பிப்ரவரியில் முதற்பதிப்பாக வெளிவந்தது. எளிய நடையில் தெளிவுரை தரப்பட்டுள்ளது என்றும்,  வேண்டிய இடங்களில் அரும்பொருள், உள்ளுறை, பாடலாசிரியர் பற்றிய குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன் என்றும் இந்நூலின் முன்னுரையில் உரைகாரர் குறிப்பிட்டுள்ளார்.

         1.திணைத்தலைப்பு, 2. பாடல், 3. புலவர் பெயர், 4. கூற்றுக் குறிப்பு, 5. தெளிவுரை, 6. சிறப்புரை என்ற அமைப்புடையது இத்தெளிவுரைப் பதிப்பாகும். இவ்வுரைப் பதிப்பு 2008 அக்டோபரில் இரண்டாம் பதிப்பாக வந்துள்ளது. இங்கு 2005 ஆம் ஆண்டு வந்த முதற்பதிப்பின் தலைப்புப் பக்கம் தரப்பட்டுள்ளது. 2008- லும் இதேபக்கமே தரப்பட்டுள்ளது.

                                                             

செவ்வாய், 21 டிசம்பர், 2010

புறநானூறு - உ.வே.சாமிநாதையர் பதிப்பு 1963

                      புறநானூற்றுக்கு உரை ஒன்றுண்டு என்ற செய்தியும்,  அவ்வுரைச் சுவடி ஒன்றும் உ.வே.சா.வுக்குச் சீவகசிந்தாமணிப் பதிப்புக் காலத்தில் கிடைத்தன. மேலும் முயன்று பல சுவடிகளைத் தேடித் தொகுத்தபோது அவ்வுரை முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே இருப்பது தெரியவந்தது. பழங்காலத்தில் எழுதப்பட்ட அவ்வுரையின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இவ்வுரையின் குறிப்புக்களால் மற்றொரு பழைய உரையுண்டு என்ற உண்மை அறியப்பட்டாலும் அவ்வுரை தற்போது கிடைக்கவில்லை என்பார் உ.வே.சா..  கிடைத்துள்ள பழையவுரையின் ஆசிரியர் அடியார்க்குநல்லாருக்கு முற்பட்டவராக இருக்கலாம் என்பது உ.வே.சா.வின் கருதுகோள்.  இவ்வ்ரையின் முதற்பதிப்பு 1894- லும், இரண்டாம் பதிப்பு 1923- லும், முன்றாம் பதிப்பு 1935-லும் வெளிவந்துள்ளன. அதன் நான்காம் பதிப்பு உ.வே.சா.வுக்குப் பின்னர் 1950- லும்,  ஐந்தாம் பதிப்பு 1956- லும், ஆறாம் பதிப்பு 1963- லும் வெளிவந்துள்ளன.

     1963 இல் வெளிவந்த இந்த ஆறாம் பதிப்பிலும் உ.வே.சா.வின் கைப் புத்தகங்களாலும் பலவகைக் குறிப்புக்களாலும் கிடைத்த திருத்தங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அதன் பதிப்பாசிரியர் க.சுப்பிரமணியன் முகவுரையில் குறித்துள்ளார். சுபகிருது ஆண்டு மார்கழித் திங்களில் வெளிவந்த ஆறாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இது.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

அகநானூறு - ந.மு.வே. உரைப் பதிப்பு 1959


             அகநானூற்றுக்குப் பழைய உரை ஒன்றுண்டு. அவ்வுரை முதல் 90 பாடல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்த 70 பாடல்களுக்கு அகநானூற்றின் முதற்பதிப்பாசிரியராகிய வே.இராசகோபாலாச்சாரியார் உரை எழுதியுள்ளார். ஆனால் அகநானூறு முழுமைக்குமான முதல் உரையைத் தற்காலத்தில் எழுதியவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம்பிள்ளை அவர்களும் ஆவர். இவ்வுரை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டது. இரண்டாம்பகுதியாகிய மணிமிடைபவளம் 1946 சனவரியில் முதற்பதிப்புக் கண்டது. அதன் மறுஅச்சுக்கள் 1949,1955,1959 ஆகிய ஆண்டுகளில் வந்துள்ளன. 1959இல் வெளிவந்த மறுஅச்சின் தலைப்புப் பக்கம் இது.

வியாழன், 16 டிசம்பர், 2010

பதிப்பு அறிமுகம் குறித்த ஒரு விளக்கம்

         பதிப்பு அறிமுகம் என்ற இப்பகுதியில் முதலில் முகப்புப் பக்கமோ, தலைப்புப் பக்கமோ தந்து பதிப்பாண்டுகள் மட்டும் தரப்பட்டன. பின்னர் மேலும் சில விவரங்கள் தரப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் இரா. அறவேந்தன் அவர்கள் என் பக்கத்தினைப் பார்த்துப் பாராட்டியதோடு, பதிப்பினைப் பற்றிய போதுமான விவரங்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். என்மீது மிகுந்த அன்புடைய அவர்களின் கருத்து இனி வரும் இடுகைகளில் செயல்வடிவம் பெறும். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.

இறையனார் அகப்பொருள் - நக்கீரர் உரை 1964

          களவியல் என்று அழைக்கப்படும் இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் செய்ததாக வழங்கப்பெறும் உரை கழக வெளியீடாக 1953 திசம்பரில் முதற்கண் வெளியிடப்பட்டது. அதன் மறுஅச்சுகள் 1958,1960,1964 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. 1964 ஆம் ஆண்டு வந்த மறுஅச்சின் தலைப்புப் பக்கம் இது.

அகநானூறு – பொ.வே.சோமசுந்தரனார் உரைப்பதிப்பு 1970

    அகநானூற்றின் முதற்பகுதியாகிய களிற்றியானைநிரை (கடவுள் வாழ்த்து முதல் 120 ஆம் பாடல் வரை) பகுதிக்குப் பொ.வே.சோமசுந்தரானார் எழுதிய விளக்கவுரையின் முதற்பதிப்பு 1970 ஆம் ஆண்டு மேத் திங்களில் வெளிவந்தது. அகநானூற்றுக்குப் பழையவுரை ஒன்று உண்டு. அதன் பின்னர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ஆர்.வேங்கடாசலம் அவர்களும் புத்துரை எழுதியுள்ளனர் ஆகிய செய்திகள் இப்பதிப்பின் பதிப்புரைக்கண் கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இவ்வுரைப் பதிப்பு வெளிவந்துள்ளது. 


புதன், 15 டிசம்பர், 2010

குறுந்தொகை - உ.வே.சாமிநாதையர் பதிப்பு 1962


          குறுந்தொகையின் முதற்பதிப்பைத் தி.சௌ.அரங்கனார் 1915 இல் வெளியிட்டார். குறுந்தொகையைப் பதிப்பிக்கும் நோக்கத்துடன் அந்நூற்கு உரையெழுதி வந்த உ.வே.சா. சிலகாலம் கழித்து 1937இலில் குறுந்தொகையைத் தம் உரையுடன் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1947-லும், மூன்றாம் பதிப்பு 1955-லும் வந்தன. அதன் நான்காம் பதிப்பு 1962இல் வெளிவந்தது. அப்பதிப்பினை வெளியிட்டவர் பற்றிய விவரம் அதனுள் இல்லை. அதன் தலைப்பு பக்கம் இது!

திங்கள், 13 டிசம்பர், 2010

நீலகேசி சமயதிவாகர வாமனமுனிவர் உரைப்பதிப்பு (1936)

       ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றாகக் கருதப்பெறும் நீலகேசியின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை . நீலகேசிக்கு உரை எழுதியவர் சமயதிவாகர வாமனமுனிவர் என்பர். நீலகேசியின் மூலமும் உரையும் 1936இல் கும்பகோணம் அரசுக் கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் சக்ரவர்த்தி என்பரால் பதிப்பிக்கப்பட்டன. இப்போது தெரிந்தவரையில் நீலகேசி யின் மூலம், உரை ஆகியவற்றுக்கு இதுவே முதல்பதிப்பாகலாம். 

        இப்பதிப்பின் தலைப்புப் பக்கம் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. முகவுரை, நூலாராய்ச்சி முதலியனவும் ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளன. அப்பகுதி 340 பக்கங்களுக்கு மேலாக அமைந்துள்ளது.  அதனைத் தொடர்ந்துவரும் தமிழ்ப் பகுதி 480-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளது. அப்பதிப்பின் தலைப்புப் பக்கம் இதோ!

வியாழன், 9 டிசம்பர், 2010

புறத்திரட்டு - வையாபுரிப்பிள்ளை பதிப்பு 1939

     புறத்திரட்டு என்பது பழைய தொகை நூல்களுள் ஒன்று. இதன்கண் இப்பொழுது அறத்துப்பாலில் 45 அதிகாரங்களும் (473 பாடல்கள்), பொருட்பாலில் 86 அதிகாரங்களும் (1032 பாடல்கள்) உள்ளன. புறத்திரட்டுச் சுருக்கத்திலுள்ள காமத்துப்பாலில் 65 பாடல்கள் உள்ளன. இவற்றைச் சேர்த்தால் புறத்திரட்டின் பாடல் எண்ணிக்கை 1570 என்பர். இத்தொகை நூல் 1938இல் வையாபுரிப்பிள்ளையால் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. அதன் மறுஅச்சு அவராலேயே 1939இல் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பின் தலைப்புப் பக்கத் தோற்றம் இதோ.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அகநானுறு - இராசகோபாலார்யன் பதிப்பு (1933)

அகநானூற்றின் முதற்பதிப்பு 1920 இல் வெளிவந்தது என்றும், அதன் பதிப்பாசிரியர் இராசகோபாலாச்சாரியார் என்றும் கூறுவர்.அதன் பின்னர் ஒரிருமுறை சிறுபகுதிகளாக (களிற்றியானைநிரை) அகநானூற்றை அவரே பதிப்பித்துள்ளார். நூல் முழுமைக்குமான பதிப்பினையும் இராசகோபாலாச்சாரியாரே வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 1933இல் வெளிவந்தது.அதனுள் அந்நூலின் முதற்பதிப்பாண்டு பற்றிய குறிப்பு இல்லை. 1933இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பின் தலைப்புப் பக்கம் இதோ.

வியாழன், 2 டிசம்பர், 2010

தொல்காப்பியத்திற்குப் பாடவேறுபாட்டு நோக்கிலமைந்த முதற்பதிப்பு

தொல்காப்பியத்திற்குப் பல பதிப்புக்கள் வெளிவந்திருப்பினும் அந்நூலின் பாடவேறுபாடுகள் அனைத்தையும் தருகின்ற முதற்பதிப்பாக அமைந்துள்ளது பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் 1996 இல் வெளியிட்டுள்ள “தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு” என்ற பதிப்பாகும். 20 ஆண்டுகால உழைப்பால் வெளியான இப்பதிப்புக்குக் கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாவர். இப்பதிப்புக்கு முன்னர் வந்த 89 பதிப்புக்களையும் ஒப்புநோக்கிப் பதிப்பித்த பெருமைக்குரியது இப்பதிப்பாகும். அதன் தலைப்புப் பக்கத் தோற்றம் இதோ!

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...